தமிழும் இஸ்லாமும் ஓர் வாழ்வியல் ஒப்பீடு - பகுதி 1

அகிலத்தின் அதிபதியின் அழகிய திருநாமத்தால் தொடங்குகிறேன்.,
 
("தமிழும் இஸ்லாமும் ஓர் வாழ்வியல் ஒப்பீடு" என்ற இந்த நெடும் தொடரை ஒலி வடிவில் கேட்க https://youtu.be/8xFyZ_fuUhE )
 

முன்னுரை:

வேதக்காரர்களே எங்களுக்கும் உங்களுக்கும் இடையே உள்ள பொதுவான விசயத்தின் பக்கம் வாருங்கள்.,

திருக்குர்ஆன் 3:64

    இஸ்லாத்தை தங்களது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு இந்த மண்ணோடும் இதன் வாழ்வியல் கலாச்சாரங்களோடும் எந்த தொடர்பும் இல்லை, அவர்கள் அந்நியர்கள் என்ற எண்ணம் சமீபகாலமாக மனித மனங்களில் மிக வேகமாக விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.,

    இஸ்லாத்தை தங்களது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு கூட, தமக்கும் இம்மண்ணின் வாழ்வியலுக்கும் இடையே எந்த பொதுவான விசயமும் இல்லை என்ற எண்ணம் மேலோங்கி இருப்பது பெரும் வேதனையே.,

    அதே போல, சாதிய அடக்குமுறைகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்காக மக்கள் தங்களை இஸ்லாத்தின் பால் இணைத்துக் கொள்கிறார்களே தவிர அதை தாண்டி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேறெந்த முக்கிய காரணங்களும் இருப்பதில்லை என்ற ஒரு மாயையும் சமீபகாலமாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நம்மில் பலரும் கவனிக்காமலேயே இருக்கிறோம்.,

    1400 வருடங்களுக்கு முன் அரபகத்தில் மறுமலர்ச்சி பெற்ற ஒரு மார்க்கம் இன்று உலக முழுவதும் பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது., என்றாலும் அல்லாஹ்வின் தூதரான எமது பேரரசர் பூமியில் இருந்த காலத்திலேயே உலகின் மற்ற பகுதிகளை விட இந்தியாவில் அதிலும் குறிப்பாக அன்றைய தமிழகத்தில் இஸ்லாம் மிக வேகமாக வேரூன்றியது என்ற வரலாற்று உண்மையையும் அதன் பின்னணியையும் உங்கள் மேலான கவனத்திற்கு கொண்டுவரவே விரும்புகிறேன்.,

    இன்று இஸ்லாம் இந்த மண்ணில் வேகமாக பரவுவதற்கு சாதிய தீண்டாமையில் இருந்து விடுபட வேண்டும் என்பது ஒரு காரணம் என்றாலும், ஆரம்ப காலத்தில் தமிழக மக்கள் இஸ்லாத்தை நோக்கி அதிகம் வருவதற்கு அதையும் தாண்டிய ஒரு காரணம் இருந்தது.,

    வாழ்வியல் வழிமுறைகளை குறித்த பேரறிவும் பெரும் கட்டமைப்பும் உலகின் மற்ற இடங்களை விட தமிழகத்தில் மிக அதிகமாகவே இருந்தது., அதே வாழ்வியல் கட்டமைப்பை தான் இஸ்லாமும் போதிக்கிறது என்பதை அறிந்த போது இங்கிருந்த மக்கள் தங்களை இஸ்லாத்தின்பால் இணைத்துக் கொண்டனர்.,

    தமிழ் இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கும் வாழ்வியல் கட்டமைப்புகளையே இஸ்லாம் தனது மார்க்க கோட்பாடாக கொண்டிருக்கிறது என்பதை இஸ்லாமியர்களாகிய நாம் அறியத்தவறியதன் விளைவு தான் நமது சொந்த மண்ணிலேயே நம்மை அந்நியர்களாக்க ஒரு கூட்டம் துணிந்துவிட்டது.,

    தமிழர் வாழ்வியலும் இஸ்லாமிய வழிமுறைகளும் எந்த அளவிற்கு நெருக்கமான ஒப்புமை தொடர்பை கொண்டிருக்கிறது என்பதை வரலாற்று இலக்கிய சான்றுகளின் மூலம் ஒப்பு நோக்குவதே "தமிழும் இஸ்லாமும் ஓர் வாழ்வியல் ஒப்பீடு" என்ற இத்தொடரின் முக்கிய நோக்கம்.,

    அதன் முதற்கட்டமாக இந்த பகுதியில் எங்கள் தமிழ் ஆசான் வள்ளுவர் தந்த வாழ்வியல் பேரறிவின் பெரும் தொகுப்பான திருக்குறள் கூறும் வாழ்வியலுக்கும் இஸ்லாத்திற்கும் இடையே இருக்கும் தொடர்புகள் குறித்து மேலோட்டமாக பார்க்கலாம்.,

    இறைவன் நாடினால் அடுத்தடுத்த பதிவுகளில் திருக்குறள் உட்பட ஒவ்வொரு தமிழ் இலக்கியமும் சொல்லும் தமிழ் வாழ்வியலுக்கும் இஸ்லாமிய வழிமுறைகளுக்கும் இடையேயான ஒப்புமைகளை முடிந்தவரை முழுமையாகவும், நுணுக்கமாகவும் ஒப்பாய்வு செய்யலாம்.,

    இந்தியாவில் மிக வேகமாக பரவுவதற்கு மிக முக்கிய காரணமாக இஸ்லாமிய வணிக முறை இருந்தது என்று சொன்னால் நிச்சயம் அது மிகையாகாது., இஸ்லாமிய வியாபாரிகளின் வணிக முறையும், நாணயமும் இங்கிருந்த மக்களுக்கு அவர்களது முன்னோர்கள் போதித்த அறத்தை தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது.,

    அநியாய இலாபம் வைத்து பொருட்களை விற்க மாட்டோம், அளவு நிலுவையில் மோசடி செய்ய மாட்டோம், பொருட்களின் குறைகளை மறைத்து விற்க மாட்டோம், தீய வழிகளில் பொருளீட்ட மாட்டோம் என்றெல்லாம் வணிகர்கள் சொன்னது இங்கிருந்த மக்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.,

    ஏன் இந்த திடீர் மாற்றம் என்று மக்கள் வினவ, அதற்கு அந்த இஸ்லாமிய வணிகர்கள், எங்களுக்கு மத்தியில் ஒரு மனிதர் தோன்றி இருக்கிறார்., அவர் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்., நாம் சம்பாதிக்கும் பொருள்கள் நமக்கு மகிழ்ச்சியையும், மரணத்திற்கு பிறகான வாழ்க்கைக்கான வெற்றியையும் பெற்றுத் தர வேண்டும் என்றால் அந்த பொருள் தீய வழியில் சம்பாதித்ததாக இருக்க கூடாது என்று எங்களுக்கு போதிக்கிறார்., நாங்கள் அவரை பின்பற்றுகிறோம்., எனவே தான் எங்களது வருமானம் எல்லா வகைகளிளும் எங்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக அதில் அதிக கவனம் செலுத்துகிறோம் என்று சொன்ன போது, நம்மிடமும் இதே கருத்து தானே இருக்கிறது என்று யோசித்த மக்களுக்கு சற்றென்று ஒரு குறள் நினைவிற்கு வந்தது,

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து 

தீதின்றி வந்த பொருள்

திருக்குறள் 754

    நாம் சம்பாதிக்கும் பொருள் நமக்கு அறவாழ்வின் மோட்சத்தையும், உலக வாழ்வில் இன்பத்தையும் தரக்கூடியதாக இருக்க வேண்டும்., அப்படி இருக்க வேண்டும் என்றால் நாம் விற்கும் பொருளின் விலை பொருளின் மதிப்பிற்கு நிகரானதாகவும், தீய வழிகளில் சம்பாதிக்கப்படாததாகவும் இருக்க வேண்டும் என்று நாம் பெரிதும் மதிக்கும் நமது தமிழ் ஆசான் வள்ளுவர் கூட நமக்கு இதையே தானே போதித்திருந்தார்., இதே கருத்தை அரபகத்தில் பிறந்த ஒருவர் எப்படி போதித்துக் கொண்டிருக்கிறார் என்று சிந்தித்தவர்களாய் அந்த மனிதரை குறித்து அதிகமாக கேட்டறிய முற்பட்டனர்., அவரது போதனைகளில் பெரும்பான்மையான விசயங்கள் தங்களது முன்னோர்கள் இலக்கியங்களில் சொல்லும் அறவாழ்வை அப்படியே எடுத்துரைக்கிறது என்பதை உணர்ந்த போது அவர்கள் தங்களை இஸ்லாத்தின்பால் முழுமையாக இணைத்துக் கொண்டனர்.,

    உலக நாகரிகங்களில் பல கற்பு நெறி என்பது பெண்களுக்கு மட்டுமே உரியது என்ற சித்தாந்தங்களை பேசிக் கொண்டிருந்த காலத்தில் கற்புநெறி பேணுவது ஆணின் மீதும் கட்டாய கடமை என்று கற்பித்தவர் எங்கள் தமிழ் ஆசான்,

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற வொழுக்கு

திருக்குறள் 148

    தனக்கு உரிமை இல்லாத ஒரு பெண்ணை நோக்கி தனது பார்வையை செலுத்தாமல் இருப்பது தான் பேராண்மை என்றும் சான்றோர்களுக்கு அதுவே ஒழுக்கமும் அறமும் ஆகும் என்று சொல்கிறார்., அடுத்த பெண்ணை பார்ப்பதே ஒழுக்கமற்ற பாவமான அறம் பிரண்ட செயல் என்ற தமிழ் ஆசானின் கருத்தையே, அடுத்த பெண்ணை இச்சையோடு தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதும் கூட விபச்சாரமாகவே கருதப்படும் என்று அச்சு பிசகாமல் எமது பேரரசர் அப்படியே கூறி இருப்பது தமிழ் கூறும் அறத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையே உள்ள நெருக்கிய தொடர்பை பட்டவர்தனமாக பறைசாற்றுகிறது.,

    இதோடு முடிந்துவிடவில்லை, அந்நிய பெண்கள் மீது செல்லும் ஒழுக்ககேடான பார்வையை தவிர்த்து அறம் உடையவர்களாய் வாழ இருவருமே ஒரே மாதிரியான தீர்வை முன்வைக்கின்றனர்.,

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது

திருக்குறள் 45

    திருமணம் என்பது உடல் தேவையை நிவர்த்தி செய்வதற்கான ஒரு வடிகால் என்ற பொது பார்வையை தாண்டி ஒரு மனிதன் அறத்தை பற்றி வாழ திருமண வாழ்க்கை அவசியம் என்று மக்களுக்கு கற்பித்தவர் எங்கள் தமிழ் ஆசான்.,

    இழ்வாழ்க்கைக்கு என்று ஒரு பண்பு இருப்பதாக சொல்கிறார்., மனிதனை அன்பிற்கும் அறத்திற்கும் உரியவனாய் ஆக்குவது தான் திருமண வாழ்வின் பெரும் பண்பு என்று சொல்கிறார்., அதோடு இல்லாமல் அன்பையும் அறத்தையும் அடைந்து கொள்வது தான் திருமண வாழ்வின் மூலம் ஒரு மனிதன் பெற்றுக் கொள்ளும் பெரும் பயம் என்றும் சுட்டி காட்டுகிறார்.,

    இறை அருளை பெற்றுத் தரும் அறத்தின் படியான வாழ்வை வாழ்வதற்கு அனைத்தையும் விட்டுவிட்டு துறவு வாழ்வை வாழ வேண்டும் என்று போதித்தவர்கள் மத்தியில் அறத்தையும் இறை அருளையும் தனதாக்கி கொள்ள திருமணம் அதி அவசியம் என்று தமிழ் ஆசானைப் போலவே கற்பித்தவர் எமது பேரரசர்., திருமணத்தின் மூலமாக மட்டுமே ஒரு மனிதன் தன் இறை நம்பிக்கையின் பாதியை அடைய முடியும் என்று கற்பித்து, திருமணம் ஒழுக்ககேடான விசயங்களில் இருந்து மனிதனை பாதுகாக்கும் கேடயம் என்று சொன்ன எமது பேரரசரின் வார்த்தைகள் இழ்வாழ்க்கை மனிதனை அறம் உடையவனாய் ஆக்கும் பண்புடையது என்ற தமிழ் ஆசானின் வார்த்தைகளோடு அப்படியே பொருந்திப் போவதில் எனக்கெந்த ஆச்சர்யமும் இல்லை.,

    மனித குலத்தில் சமூக நீதியையும் சமத்துவத்தையும் நிலை நாட்டுவதிலும் தமிழும் இஸ்லாமும் ஒத்த பார்வையையும் ஒரே குறிக்கோளையும் கொண்டிருக்கிறது என்பதற்கு பல நூறு சான்றுகள் இருக்கிறது., என்றாலும ஒரே ஒரு விசயத்தை மட்டும் மேற்கோள் காட்டி இத்தொடரின் இப்பகுதியை நிறைவு செய்ய விரும்புகிறேன்.,

    பிறப்பை அடிப்படையாக கொண்டு மனிதர்களை உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்று வகை செய்யும் ஒரு கேவலமான சித்தாந்தம் எல்லா கலாச்சாரங்களிளும் இருக்கத்தான் செய்கிறது., நாகரீகத்தின் உச்சத்தை அடைந்து விட்டோம் என்று மெச்சிக் கொள்ளும் இந்த காலகட்டத்தில் கூட இந்த வேற்றுமைகள் சரியானதும் அவசியமானதும் தான் என்று உளரிக் கொண்டிருக்கும் மூடர்களும் நமக்கு மத்தியில் இருக்கத்தானே செய்கிறார்கள்., இந்த மடத்தனமான சித்தாந்தத்தை கூறிய சம்மட்டி கொண்டு அடித்து நொருக்கியவர்கள் எந்தன் தமிழ் ஆசானும் எமது பேரரசரும்.,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்

திருக்குறள் 972

    என்ற தமிழ் ஆசானின் குறளுக்கு விளக்கம் போல் அமைந்திருக்கிறது எமது பேரரசரின் வார்த்தைகள்., எந்த அரபியும் அரபி அல்லாதவனை விடவோ, எந்த அரபி அல்லாதவனும் அரபியை விடவோ, எந்த வெள்ளையனும் கருப்பரை விடவோ எந்த கருப்பரும் வெள்ளையரை விடவும் சிறந்தப்போ மேண்மையோ உடையவர்கள் அல்ல., இறைவனுக்கு அஞ்சி நடப்பவரே சிறந்தவர் என்று கூறினார்.,

    இதைத் தானே மேற்சொன்ன குறளில் தமிழ் ஆசானும் சொல்லி இருக்கிறார்., இந்த மனிதனும் பிறப்பை அடிப்படையாக கொண்ட இனத்தாலோ நிறத்தாலோ சிறப்பை அடைய முடியாது, பிறப்பின் அடிப்படையில் எல்லோரும் சமம் தான்., ஒரு மனிதனின் செயல்களைக் கொண்டே அவனது சிறப்பு அளவிடப்படுகிறது என்று.,

    இவ்வாறாக கல்வி, அரசியல், மருத்துவம், இல்லறம், தனி மனித நடத்தை, போர் நியதி, குழந்தை வளர்ப்பு என வாழ்விற்கு அவசியமான எல்லாவற்றைக் குறித்தும் தமிழும் இஸ்லாமும் பெரும்பான்மையான சமயங்களில் ஒத்த கருத்தையே கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு சின்ன சிறு உதாரணம் தான்., அடுத்தடுத்த பகுதிகளில் இன்னும் அதிகமாக பார்க்கலாம் இறைவன் நாடினால்.,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்அப்பொருள்  

மெய்ப்பொருள் காண்ப தறிவு

திருக்குறள் 423

என்ற தமிழ் ஆசானின் வார்த்தைக்கு இணங்க இங்கு நம் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கும் விசயங்களின் மெய் பொருளை காண முயற்சிப்போம்., தவறாகவோ, மிகை/குறைவாகவோ ஏதேனு குறிப்பிட்டிருந்தால் தயவுசெய்து சுட்டிக்காட்டுங்கள் திருத்திக் கொள்கிறோம்., இறைவன் நாடினால்.,

"எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக!''

-தொடரும்.,

 

Comments

Popular posts from this blog

லூசிஃபர் Vs இப்லீஸ்?

ஆளத்துடிக்கும் அடிமைகள் பாகம் ஏழு "யாருக்கான வெளிப்பாடு"

இலுமினாட்டிகள் ஒரு முன்னறிமுகம்.,